Thursday, February 10, 2011

மலரும் அமுதும்

தமிழுக்கு அமுதென்று பெயர். எனக்கு மலரென்று பெயர். கவிதை உருவாக தமிழ் என்னில் சுரக்கின்றதா? இல்லை, நான் தமிழை பருகிக்கொண்டு உருமாற்றுகிறேனா? நான் மலரா தேனீயா?

க. ஒரு எழுத்தின் வளைவுகளில் நான் சொக்கிப் போகிறேன்.  ழ. ஒரு எழுத்தின் வாலில் சுருண்டுப் படுத்து தூங்குகிறேன். ம. ஒரு எழுத்தின் மலை ஏறி விண்மீன் பறிக்கிறேன். ற. ஒரு எழுத்தின் மேடு பள்ளங்களில் சறுக்கிச் செல்கிறேன். த. ஒரு எழுத்தின் கரம் பற்றி நடனம் ஆடுகிறேன். ட. ஒரு எழுத்தின் நுனியால் வார்த்தைகளை கூர்மையாக்குகிறேன். கு. ஓர் எழுத்தின் சுழிகளில் மூழ்கிப் போகிறேன்.

இந்த மொழியை புணர்ந்து கவிதை பெற்றெடுக்கிறேன். நான் மலரா தேனீயா?

என்ன இருக்கிறது இந்த மொழியில் என்னை மலர வைப்பதற்கு? இழந்த குழந்தை பருவங்கள், பருப்பு வேகும் மனம், குளத்தின் மீது தகதகக்கும் சூரிய ஒளி, தூங்கி விழுந்த தமிழ் வகுப்புகள், விரல்களின் நடுவே பேனாவைப் பிடிக்கும் சுகம், தத்தெடுத்த நாய்க்குட்டியை கொஞ்சும் முனகல், மரங்கள் காற்றில் ஆடும் தருணம் - மார்கழி முடிந்ததும் பாதாம் மரத்தின் மீது படரும் சிவப்பின் பல சாயல்கள், பூத்துக் குலுங்கும் மாமரம், காற்றை வருடும் தென்னை, தொடுவானத்தை கிழிக்கும் பனை, துவர்ப்பான திராட்சை தரும் வேப்ப மரம் - முட் புதர், வற்றிய வயல்கள், நிறைந்து வழியும் பேருந்துகள், சுவரொட்டிகள், சந்தைகள்,  மழையால் செதுக்கப்பட்ட குகைகள், மண் வாசனை - இவ்வளவு தானே? இவற்றில் நான் ஏன் தன்னிலை இழக்கிறேன்?

நான் மலரா தேனீயா?

Saturday, February 5, 2011

பசி

ஒரு உலகத்தை, பின் லட்டுபோல் ஒரு நிலவை, முழுங்கும் அளவு பசி.
ஒரு பெண் இவ்வளவு சாப்பிடக் கூடாது என்று அவளிடம் சொன்னார்கள், அவள் ஒரு நட்சத்திரத்தை வானில் இருந்து பறித்து மென்று கொண்டிருந்த போது.
ம்ம், என்றாள். அவள் தட்டிலிருந்த சில மலைத் தொடர்களை அவள் தாய் தட்டிவிட முயற்சித்தார்.
சில கடல்கள் அவள் வாய்க்குள் கொந்தளித்தன. கொப்பளித்து, துப்பினாள். ஒரு திமிங்கிலத்தை பல் இடுக்கில் இருந்து உருவினாள். சில காடுகளை, மாபெரும் பனிக்கட்டிகளையும் ஒரு கிண்ணத்திற்குள் போட்டாள், மேலே சில புல்வெளிகளை தூவி, சில கருமேகங்களை பொழிந்தாள். ஒரு குகையால் நிலங்களை தன வாய்க்குள் செலுத்தினாள். பின், மண் வாசனையை நுகர்ந்த படி, சில சுனாமிக்களை தன் தேநீர் கோப்பையில் சுவைத்தாள்.

English version here