Monday, August 22, 2011

அவள்

ஒடுக்கப்படுகிறாள். ஒடுக்குகிறாள். என்னை அவள் பிம்பத்தில் செதுக்க உளியுடன் வருகிறாள். என் சதையும், ரத்தமும் கல்லாய் உறைகின்றன.

சாதியை அன்பூற்றி வளர்த்தவள் இவள். 'நாமெல்லாம் இப்படி,' 'அவர்களெல்லாம் அப்படி' என்று மனிதத்திற்கே நீர் தெளிப்பாள். பல ஆயுதம் ஏந்தும் கொலைகார சாதியத்தின்  அடியாள் அவள். 'நீ அவனுடன் பேசினால் படிப்பை நிறுத்துவேன்.' 'நீ அவளைத் திருமணம் செய்தால் தற்கொலை செய்வேன்.' மிரட்டலின் ராணிக்கு, காதலின் எதிரிக்கு எப்படி அன்பின் உறைவிடம் என்று பெயர்வைத்தார்கள்?

பின் சாமியை உருண்டை உருண்டையாக உருட்டி, 'அதோ பார் விழா,' 'இதோ பார் புது உடை,' என்று அறியா பருவத்தில் வாயினுள் சாமியைத் திணித்தவள். மறுக்க வாயைத் திறந்தபோது, 'உள்ளே உலகமே சுழலுதே' என்று பரவசத்தில் மூழ்கினாள். ஏசு நாதரின் மறு பிறவியாக என்னை அறிவித்து, சிலுவையில் அறைந்துவிடக்கூடாதே என்று வாயை மூடினேன்.

 உயிருடன் பெண்ணை அக்கினிக்கு ஊட்டிவிடும் சடங்கு இன்னும் ஓயவில்லை. சமையலறை அவளை ஒரு முப்பதாண்டுகளாவது வாட்டி, வதக்கி, வேகவைத்து, பொறித்து, சுட்டெரித்திருக்கும். பல ஆயிரம் தோசை அவளை சுட்டிருக்கும். சில நூறு பனியாரம் அவளை பொறித்திருக்கும். எத்தனை முறை சோறு அவளை உலையில் போட்டதோ. யார் அறிவார். அந்த நரக வேதனையை ஒரு நாளும் பேசமாட்டாள். வெந்து வதங்க புது புது முறைகள் கண்டுபிடிப்பாள்.

(இவை பெண் வேலை, இவை ஆண் வேலை. முலை இருப்பது பால் சுரக்கவும், பால் பொங்க வைக்கவும், காபி பரிமாறவும் உதவுகிறது. மூளை இருப்பதினால் யாருக்கு என்ன லாபம்?)

பெண் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுப்பாள் - அடக்க ஒடுக்கமாக, அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் ஏதுவாக, கையில், காலில், கழுத்தில் விலங்குகளோடு - தங்கத்தில் செய்தாலும் சங்கிலி, சங்கிலி தானே?

அவள் ஒரு புதைகுழி. தேவைகளால், வெறுப்புகளால், விருப்பங்களால் என்னை உள்வாங்குகிறாள். பெரும் பாதாளங்களை மூடும் மேக மூட்டம் அவள். பஞ்சைப் போல் மென்மையாக தெரிகிறதே என்று அவள் அரவணைப்பில் விழுந்தால், அந்தரத்தில் இருப்பது வெகு நேரம் தெரியாமல் போகலாம்.

கொஞ்சி குலாவி தாலாட்டி சீராட்டி சோறூட்டி ஆளாக்கி. போதும்பா உங்க தாய்மையான பொய்கள். 

படம்: ஜாமினி ராயின் தாயும் குழந்தையும் 

Saturday, August 6, 2011

பலி



கண் விழித்தபோது, ஒரு கல் மேடையின் மேல் கிடந்தேன், கையும், காலும் விலங்குகள் பூட்டப்பட்டு.

மேலே கழுகுகள் வட்டமிட்டன.

கொடூர அலறல்கள் திடீரென்று பக்கத்தில், திடீரென்று வெகு தூரத்தில் ஒலித்தன.

ஒரு வியர்வை துளி என் கண்ணின் ஓரத்தில் இருந்து விழுந்தது. 'அழுகிறாயா?' ஒரு அமைதியான குரல் கேட்டது.

தலையை திருப்பமுடியவில்லை. சூரியன் கண்ணுள் குடிகொண்டுவிட்ட மாதிரி எரிச்சல், கண்ணீர் வழிய, பார்வை மங்கியது. ஒளி கீற்றுகள் கடலின் வழி இறங்குவது போல், கடலடியில் இருந்து சூரியனைப் பார்ப்பது போல் ஒரு உணர்வு. ஆனாலும் கண் எரிகிறது.

ஏதோ ஒரு மிருகம் அருகில் இருந்து உறுமுகிறது. கழுகின் அலறல் காதைக் கிழித்தது. வெயில், வியர்வை, உறுமல், அலறல்.

மீண்டும் அந்த குரல், 'தண்ணீர் வேண்டுமா?' இப்பொழுது என் தாகமும் எனக்கு நினைவூட்டப்பட்டது. காய்ந்த தொண்டையில் ஈரம் வரவழைக்க முயல்கிறேன். 'ஆம்' என்று சொல்ல எத்தனிக்கிறேன். வெறும் ஒரு வறண்ட சத்தம், மழை நேர தவளைகள் குதூகூலத்திற்கு ஒத்த ஒரு சத்தம் வெளிவந்தது.

இன்னொரு வியர்வை துளி என் மேல் உதட்டில் பூக்க, அதை நக்கப் பார்க்கிறேன். நாக்கின் சொரசரப்பு புதிதாக இருக்கிறது, துளி மறைந்த இடம் தெரியவில்லை, காய்ந்த நாக்கிற்கு எந்த ஈரமும் சேர்ந்ததாக தெரியவில்லை. தாகம். வியர்வை.

உறுமல்.

இப்பொழுது உறுமல் வெகு அருகில், பயத்தில் விம்முகிறேன். கண்ணீர் சொட்டு என் முகத்தருகே விழ, அந்த மிருகம் என் முகத்தில் மூச்சுப்பட குனிந்து, அதன் வறண்ட நாக்கினால் நக்கிய பின் லேசாக உறுமலின் தொனி மாறுகிறது. என் முகத்தை, என் கண்ணருகில் நக்கியது. அதன் கண்கள் மட்டும் நினைவில் நின்றன. எரியும் தங்கத்தைப் போல் தகிக்கும் அந்த கண்கள். என் அழுகை நின்றதும் என் கன்னத்தில் பல் பதித்தது. மீண்டும் பயத்தில் அழுதேன். மீண்டும் கண்ணீரை நக்கியது.

'நீ அழும் வரை அது உன்னை சாப்பிடாது,' என்றது அந்த அமைதியான குரல்.

சூரியனைக் கண்ணில் தாங்கி, உயிரைக் கண்ணீர் துளியில் பதுக்கிவைத்து கிடந்தேன், உயிர்பலியாய்.