Saturday, April 9, 2011

பெண் புத்தகப்புழுவாக இருக்கலாமா?

புத்தகங்களைப் பற்றியக் கட்டுரை என்று ஆர்வமாக படிக்க தொடங்கிய வாசகிக்கு ஒரு திடீர் அதிர்ச்சி. இந்த கட்டுரை அவளுக்காக எழுதப்படவில்லை. அவனுக்காக எழுதப்பட்டது. கட்டுரையை சொந்தமாக்க முடிவெடுத்தாள். 'வாசகன்' பதில் 'வாசகி'யை ஏற்றினாள். 'அவனுக்கு' பதில் 'அவளுக்கு' என்று ஆக்கினாள்.


ஆனால் புத்தக வாசகிக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவளைப்பற்றிக் கொள்கிறது, அவள் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறாள், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறாள், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறாள், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறாள், ஆகவே புத்தகவாசகி ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறாள்.....என்று எழுதினாள். 

'அவள்' சேர்ந்தவுடன் வாக்கியங்களுக்குள் வேறு அர்த்தங்கள் உதித்தது ஏன்? உறுத்தல் குறைந்தப்பாடில்லை.

நினைவுகள் அவளை சுழன்று எட்டுத்திக்கிலும் இழுக்கின்றன.

நகைக்கு செலவு செய்யும் பெற்றோரிடம் புத்தகங்களுக்காக கெஞ்சியது "இப்ப நீங்க செலவு பண்ணுறதுல பத்துல ஒரு பங்கு கூட வேண்டா, நூறுல ஒரு பங்கு மட்டு புக்ஸ் வாங்க தாங்களே," என்று அழுதது.

"பொம்பள பிள்ள. எப்ப பாத்தாலும் புத்தகத்துள்ள மூக்க நொழச்சுட்டு இருக்கலாமா?" என்று திட்டிய பாட்டி (பி.ஏ. படிக்கத் தொடங்கி பாதியிலே திருமணம் செய்யப்பட்ட பாட்டி).

தன் பள்ளி நூலகத்திலிருந்து கடன் வாங்கிய புத்தகம் ஒன்றில் பெண் உறுப்புகளின் பெயர்கள் அத்தனையும் அடிகோடிட்டு வைத்திருந்தான் எவனோ.  இவளுக்கு புரியவில்லை. முலைகள் அழகான அங்கங்கள் தான். சந்தேகமில்லை. அவற்றின் பெயரை அச்சில் கண்டால் கூட பேனாவால் வருடிப்பார்க்க வேண்டிய தேவை இவளுக்கு புரியவில்லை.

பல மணி நேரங்கள் பல நூலகங்களுள் நினைவை தொலைத்தது. 

பல ரயில் பயணங்களின் நடுவே ஒரு புத்தக பயணத்தில் தொலைந்தது.  

"இவள் புத்தகப்புழு," என்று பல ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், காதலர்கள் சந்தோஷத்துடனும், சலிப்புடனும், கோபத்துடனும், அன்புடனும், ஆதங்கத்துடனும், பயத்துடனும், மரியாதையுடனும், கர்வத்துடனும் சொல்வார்கள்.


"வீட்டோர் சொல்கிறார்கள்," "வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது", "ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார்" "அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது" "பழைய உடைகள். வீட்டுஉபயோகப்பொருள்கள். பொம்மைகள். நாற்காலிகள் மெத்தைகள். கரண்டி டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன, ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை. அதைப் படித்து முடித்துவிட்டதும் எடைக்குப் போட்டால் கிலோவிற்கு ஐந்து ரூபாய் தருவார்கள், அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,"

யார் நினைக்கிறார்கள்? யார் அவர்கள்? அதே முலைகள் கொண்ட, புத்தகம் வாசிக்காத, சனியே பிடிச்ச பெண்கள் தானா? 

ஒரு நாள் ஒரு காதலன் அவள் வீட்டுக்குள் வந்தான். நிரம்பி வழியும் புத்தக அடுக்குகளை பார்த்தான். இது தான் உன் கணவனா? என்று கேட்டான். ஆம், என்றாள்.

இன்று கூட தன் கணவனின் கூரிய காகித நுனிகள் தன் கன்னத்தைக் கீற எழுந்தாள். படுக்கையில் பாதி புத்தகங்களுக்கான இடம். பிறகு என்ன? பாவப்பட்ட ஆண் வாசகனுக்காக வருத்தப்பட நேரமில்லை. (பெண் வாசகியான) என் பயணங்களைத் தொடர்கிறேன். 

பின் குறிப்புகள்: சாய்வெழுத்துக்கள் அத்தனையும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய  'புத்தகங்களை என்ன செய்வது?' என்கிற கட்டுரையிலிருந்து அப்படியே, அல்லது சில மாற்றங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. 

முதல் புகைபடம் : டேவிட் ப்லாச்க்வெஸ் 

இரண்டாம் படத்தின் ஓவியர்: மேரி கசாட். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் வரைகலை பயில்வதற்கு பல தடைகள் இருந்து காலங்களில் பெண்களின், குழந்தைகளின் அந்தரங்க வாழ்வின் தருணங்களை மிக இயல்பாக வர்ணித்தவர்.  

மூன்றாம், நான்காம் படத்தின் ஓவியர்: இதய நாயகர் பிக்காஸோ.