Sunday, May 15, 2011

கதை


ஒரு கதையுடன் கர்ப்பமாய் இருக்கிறேன். அதன் தந்தை யாரென்று தெரியவில்லை. எத்தனை கதைகளுடன் கட்டி புரண்டிருப்பேன், உரை அணியும் எண்ணமெல்லாம் மறந்து...

இப்பொழுது கதை என்னுள் புரள்கிறது.

சுற்றி சில பேர் சிரிக்கிறார்கள், நக்கலாக, இளக்காரமாக. சிலர் லேசான கோபத்துடன் கேட்கிறார்கள், இந்த கதையை பெற்றெடுப்பேன் என்று ஏன் அடம்பிடிக்கிறாய்? ஒரு கதையை வளர்க்கும் அறிவு உனக்கு இருக்கா? மற்ற சிலர் பரிவுடன் கேட்பது போல் பேசுகிறார்கள். திடீரென்று நடுவில் ஒரு கேள்வி. ஆனால் தந்தை யார் என்று உனக்கு கட்டாயம் ஒரு யூகமாவது இருக்கனுமே...நான் மௌனம் சாதிக்கிறேன்.

அம்மா அழுகிறாள், தந்தை தெரியாத கதைகளைப் பெற்றுப்போடவா உன்னை வளர்த்தேன், என்று.

காலைகளில் அசையமுடியவில்லை. குடலை புரட்டிபோடும் குமட்டல். வார்த்தைகள் உள்ளே கொந்தளிக்கின்றன, என்னை கடைந்தெடுக்கின்றன.

மதியம் ஒரு பாப்லோ நெரூடா கவிதையும் சில ஜேம்ஸ் ஜாய்ஸ் வாக்கியங்களையும் மெதுவாக கொறித்துக் கொண்டிருக்கிறேன். கதை என்னுள் சிரிக்கிறது.

தங்கை போனில் அழைக்கிறாள். பெண்ணாக இருந்தால் என் பெயரை வைக்க வேண்டும், சரியா? என்கிறாள். வேறு வேலை இல்லை எனக்கு, என்று அவளுடன் கோவிச்சுக்கொள்கிறேன்.

நல்லதம்மா, உடனே கருகலைப்பு என்று ஏதும் செய்யவில்லையே, என்று சித்தி ஆறுதலடைகிறாள்.

யாரும் இல்லாத சமயத்தில், கதையுடன் ரகசியமாக பேசிக்கொள்கிறேன். உலகத்தில் நடப்பவை, அஸ்தமிக்கும் சூரியன்களும், விரியும் இலைகள், உலகில் தினம் எத்தனை கதைகள் பிறக்கின்றன, கதைகளுக்கு பிடித்த வார்த்தை விளையாட்டுகள், ஒரு கதையாடலுக்கு எவ்வாறு தாலாட்டு பாடுவது என்று பல விஷயம் சொல்கிறேன் கதையிடம். எல்லாவற்றையும் அது கேட்டுக்கொண்டிருக்கும். நடுவில் வேலை வந்து நான் பேச்சை நிறுத்தினால், வேகமாக வளரும் கதாபாத்திரங்களால் என்னை வதைக்கும். மறுபடியும் அதற்கு புது விஷயங்கள் சொல்லவேண்டும்.

மருத்துவரிடம் செல்கிறேன். பாரம்மா, இந்த கதைகளைப் பெற்றெடுப்பது ஒரு சனியே பிடிச்ச வாழ்கை, பொம்பளைக்கு இது எல்லாம் அழகில்லை, என்று அறிவுறுத்தினாள். அப்படியா, என்று கேட்டேன். அப்பொழுது இந்த கதைகருவை கலைத்துவிடலாமா என்று கேட்டாள். முடியவே முடியாது, என்றேன். ஏன், கருகலைப்பிற்கு உன் மதத்தில் தடை ஏதும் இருக்கிறதா, என்று கேட்டாள். 

கதைகரு என்னை உதைத்தது. என்னம்மா, என்று கேட்டு, என் வளரும் வயிற்றின் மீது கைவைத்தேன். 

கதை பேசியது.

டாக்டர், கேட்கிறதா உங்களுக்கு, என் கதை பேசுகிறது! அம்மா என்று சொல்கிறது, என்று பூரித்தேன்.

ஐயோ, நான் ஆமா என்று சொன்னேன், என்றது கதை. 

எதற்காக? என்று கேட்டேன். 

ஆமா, இப்போ என்ன வச்சு உன்னோட பெண்ணியத்த பேசத் தொடங்காத, என்று சொல்ல வந்தேன், என்று சொன்னது கதை.

இந்த சின்ன கருவிற்கு எவ்வளவு அறிவு பாருங்கள், டாக்டர். 

ஐயோ, நான் அறிவாளிக் கிடையாது, என்று மறுத்தது கரு.

நான் கரு, அவ்வளவுதான்.

அதற்குப்பின் கதைகரு பேசவில்லை.

சில நிமிடம் மௌனம் காத்த டாக்டர், லேசாக சிரித்தாள். இப்பவே இதுக்கு இவ்வளவு திமிரு, இன்னு சில மாசத்தில பாரு. தேவை இல்லாத நேரத்துல பேசும், திடீரென்று புது கதாபாத்திரங்கள் முளைக்கும், அப்புறம் ரத்தம் சொட்ட சொட்ட உருவெடுக்கும், தேவையா இதெல்லாம், என்றாள்.

எத்தனை மாதங்கள் ஆகும், டாக்டர்?

யாருக்கு தெரியும், என்றாள். 

ஒரு சில்வியா பிளாத் கவிதையை மென்றவாறு, ஆஸ்பித்திரியில் இருந்து கிளம்பினேன். என்னம்மா, ஒலகமே இடிஞ்சு விழுந்த மாதிரி மொகத்த வச்சிருக்க, என்று ஒரு மூதாட்டி கேட்டாள். 

கதையுடன் கர்ப்பமாய் இருக்கிறேன், என்றேன்.

அவள் ஆறுதலாக தோளைத் தட்டிகொடுத்துவிட்டாள். கதையோட முடிஞ்சிருச்சுன்னு சந்தோசப்படும்மா, இதே நாவலா இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப, என்று கேட்டாள்.

கதைகரு கனவு காணத் தொடங்கியது. வளர்ந்தவுடன் பெரிய நாவலாக வேண்டும் என்று. 

மிரண்டு போய் வீடு திரும்பினேன். நீல் கேமன் எழுதிய புது கதை ஒன்று என் கட்டிலில் கிடந்தது. என்ன இத்தனை நேரம், என்று கேட்டது. அப்புறம் பல வித பார்வைகள், சீர்குலைப்புகள், வருடல்கள், தேடல்கள், திகில்கள் எல்லாம் முடிந்தன.

எழுந்த பிறகு உணர்ந்தேன், இன்னொரு கரு என்னுள் உருகொள்வதை.

*********