Sunday, October 24, 2010

ஊர் புதுசு

அவள் பல நூற்றாண்டாக வாழ்ந்து வந்த ஊரு அவளுக்கு அந்நியமானது.
மழை காலத்தில் வெயில் அடித்தது. ஆட்டோ ஓட்டுனர்கள் அவளிடம் கனிவுடன் பேசினார்கள்.
வெயில் காலத்தில் மழை கொட்டியது. பறவைகள் தலை கீழாக பறந்து சென்றன.
மறுபடியும் தேர்வு எழுதியவளுக்கு, கணிதத்தில் ஆங்கிலத்தை விட அதிக மதிப்பெண்கள் கிடைத்தன.
சாலை கடப்பவர்க்கு வாகனங்கள் நின்று சென்றன.
மரங்களின் வளைவுகள் புதிதாகி விட்டன, கிளைகள் வெடித்து, தெறித்து வானத்தை அணைப்பது போல் விரிகின்றன.
இவளிடம் சில்லறை இல்லாத பாவத்துக்கு பஸ் கண்டக்டர் எரிஞ்சு விழவில்லை.
மலை சரிவின் வண்ணங்கள் அவள் கணினி மேல் வழிந்து ஓடின.
ரஜினி படத்திற்கு டிக்கெட் இரண்டாம் வாரமே கிடைத்தது.

விசித்திரம் தான்.

Tuesday, October 19, 2010

கோபம்

I
இது இவளுக்கென்ற தனி இருட்டறை. உள்ளே நுழைய வேறு எவருக்கும் அனுமதி கிடையாது.

இதயம், எலும்பு கூடிலிருந்து விடுதலை வேண்டி, துடிப்புடன் அந்த கதவில் தட்டும். மேல் விரையும் ரத்த அழுத்தம் அந்த கதவை சிதறி அடிக்கும்.

புயலாய் உள்ளே நுழைவாள். அறை அவளை அரவணைக்கும். பலி ஆடுகளின் கறியை அவளுக்கு பரிமாறும். அவற்றின் குடலை உருவி அவள் கண் முன் உலுக்கி காட்டும், அவள் சிரிக்கும் வரை.  அவள் கால் நகங்களில் பூசுவதற்கு அவற்றின் ரத்தத்தை பிதுக்கி தரும்.

பச்சை கறி துண்டை மென்றவாரே, இவளும் அறையை அணைத்துக் கொள்வாள். உன்னை தவிர வேறு யாரும் என்னை புரிந்து கொள்வதில்லை, என்று விசும்புவாள். அறை ஒரு அலறலை பாடி, அவளை தூங்கவைக்கும்.
அவளுக்கு முழிப்பு வரும் போது, அறை மறைந்துவிடும்.

II
அறையின் பிறப்பிடத்தைத் தேடி, இவள் பல ஆபத்தான பயணங்களை மேற்கொண்டாள், பாதாளங்களில் இறங்கினாள்.

ஒரு சிறு பிள்ளை தன் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டிருந்தது, "பெரிசானது, நானு அக்காவு கல்யானோ பண்ணி, வீடு நடத்துவோ." பிரளயமாய் புறப்பட்ட சிரிப்பு அந்த குரலை அழித்தது.

பாதாள பாதைகளை தொடர்ந்தாள். தம்பி-எவ்ளோ-வெள்ளையா-இருக்கா என்ற ஊரை சுற்றிப் பார்த்தாள். அம்மாவுக்கு-யே-என்ன-பிடிக்கல என்ற நகரத்தை நன்கு அறிந்தவர்களின் சலிப்புடன் கடந்தாள். என்-அப்பா-ஒரு-மன-நோயாளி என்ற மந்திர விளையாட்டு பூங்காவில் சிறிது நேரம் செலவிட்டாள். அந்த பூங்காவில் நிமிடத்திற்கு ஒரு புது மாயாஜாலம் காண்பிப்பார்கள். பல முறை சுற்றிவந்தாள்.

III
அந்த அறையின் செங்கல்களை இங்கிருந்து தான் செதுக்கி எடுத்தார்கள், என்று வழி துணைக்கு வந்தவன் சொன்னான்.

அப்படியா, என்றாள்.

அந்த அறையுள் அடுத்த முறை நுழைந்தபொழுது அவள் தூங்க வில்லை - முழிப்புடன் அவளை அரவணைத்த அறையை நோட்டமிட்டாள்.செங்கல்கள் வேறொன்றும் இல்லை, இவை தான் - மண்டை ஓடுகள், புத்தகங்கள், சானிட்டரி நாப்கின்கள், கதவுகள், உறவுகள், ராஜ்யங்கள், பழைய காதலர்களின் புகை படங்கள், கனவுகள், மிரட்டல்கள், பத்திரிக்கைகள், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைகள். அந்த செங்கல்களின் அற்புத வடிவங்களை மொழி பெயர்க்க தொடங்கினாள்.

படங்கள்: சால்வதோர் டாலி

Saturday, October 9, 2010

விழு/பற

அவளுக்கு பின்னால் ஒரு மாபெரும் கண்ணாடி ஜன்னல். ஒரு தோட்டா அவளை நோக்கி பறந்தது. திரும்பி பார்க்காமல் பின்னால் எம்பி குதித்தாள்.

கண்ணாடி துகள்கள் அவளை சுற்றி தெறிக்க, வெளியே விழுந்தாள். நகரத்தின் விளக்குகள் வெளிச்சத்தாலான கோலங்கள் போல்,  நட்சத்திர தோட்டம் போல் அவள் தலைக்கு மேலே விரிந்தன. காற்றில் புரண்டு படுத்தாள். இப்பொழுது வானின் நட்சத்திரங்கள் அவள் தலைக்கு மேல். கைகளை விரித்தாள், பறவையின் சிறகுகள் போல், சில முறை அசைத்து பார்த்தாள். இன்னும் மேலே எம்பினாள்.

அந்த கட்டிடத்தின் முன் தோற்ற கண்ணாடி ஜன்னல்களில் அவளுடைய பிம்பங்கள் மேலே பறந்தன. அவள் இதை அழகு பார்க்க கட்டிடடத்தை பார்த்தபோது, ஒவ்வொரு ஜன்னலிலும் ஒரு நிலா. ஆயிரம் நிலவுகள். ஒரு பறவை கூட்டம் நிலவை சரி பாதியாக வெட்டி சென்றது. பறவைகளின் கறுப்பு நிழல்கள் கடந்ததும், மீண்டும் முழு வட்டமாக மாறியது நிலா.


உயரம். சில ஆந்தைகள் இவளைக் கண்டு கிறீச்சிட்டன. இவள் பதிலுக்கு கிறீச்சிட்ட வார்த்தைகளை காற்று பிய்த்துக்கொண்டு அதன் ஓலத்தில் அமுக்கி மறைத்தது. மெளனமாக மேலே பறந்தாள்.
நகரத்தின் விளக்குகள் தூரத்து மின்மினிகளாக தெரிந்தன. மேகங்கள் இரு புறமும் கீழ் விரைந்தன. முகத்தை கிழித்த காற்று கண்களில் நீர் பெருகச் செய்தது. பொங்கி எழுந்து, கன்னத்தில் பனித் துகளாய் உறைந்த கண்ணீரையும் அவள் முகத்தில் இருந்து பிய்த்துச்சென்றது. உயர்ந்தாள்.

அவள் கீழே எல்லா திசையிலும் பஞ்சு குவியல்களாக மேகங்கள். திடீரென்று கீழிருந்த மேகம் பிரகாசித்தது. ஒரு வினாடி ஒளிர்ந்தது. திடுக்கிடும் ஒலியாய் இடி இவள் கீழ் வெடித்தது. மழை பெய்வதன் சத்தமே இல்லை. நீர் இலையுடன், சுவருடன், மண்ணுடன் கூடும் இசை தான் மழை சத்தம் போலும். கீழே சென்று பார்த்து விட்டு, முழுவதுமாய் நனைந்து மேலே மீண்டு வந்தாள்.
காற்றில் ஆடைகளை உதறிவிட்டு மிதந்தாள்.

Thursday, October 7, 2010

புத்தகப் பாலை

புத்தகங்களாலான வனாந்திரத்தை மெதுவாக கடந்து சென்றாள். இரு பக்கமும் வறண்டு போன புத்தக மலைகள் வானுயர வளர்ந்திருந்தன. சில நேரம் அழுதுக் கொண்டும், சில நேரம் புத்தகங்களை லேசாக விரல்களால் வருடிக்கொண்டும் அவள் சென்றாள். இடிந்த அரண்மனைகள், வளரும் அரசுகள், அழிந்து போன நாடுகள், விஸ்தரிக்கும் எல்லைகள், எல்லாம் புத்தகங்களுக்குள் பதுங்கிக் கிடந்தன. தெரியாமல் ஒன்றை திறந்துவிட்டால் இடம், நேரம், நம்பிக்கை, எல்லாம் தலைகீழாக மாறுவதற்கு வாய்ப்பிருந்தது. எவற்றையும் திறக்காமல் சென்றாள்.
 
மனிதர்கலாலான வனாந்திரத்திற்கு இறங்கி சென்றாள். வலது காலை எடுத்து வைக்க முயற்சித்தாள். பின் எடது காலை. மனிதர்கள் புகை போல் அவளை சூழ்ந்துகொண்டு, முகர்ந்து பார்த்தார்கள். புத்தகங்களின் வாடை அவள் உடல் எங்கும் பரவியிருந்தது. முடியில், ஆடையில், விரல் நுனிகளில் - பழைய காகிதத்தின் வாசனை படர்ந்திருந்தது. மனிதர்கள் லேசாக பின் வாங்கினார்கள், அவர்களின் வனாந்திரத்தின் எல்லை கோடுகளை கவனமாக வரைந்தார்கள், அவள் கால்கள் வெளியே இருக்கும் படியாக எல்லை கோடுகள் வரைந்தார்கள். அவள் அழுகையெல்லாம் பல நூற்றாண்டிற்கு முன்னரே உறைந்து போய்விட்டது. இப்பொழுது புன்னகையுடன், திரும்பி பார்க்காமல், கீழே இறங்கினாள்.

எல்லைகள் மறைந்தன. காலம் மறைந்தது. ஆதி குகையில், ஆதாமும், பிரம்மனும் குளிர் காய்வதை நிறுத்தி விட்டு இவளை திரும்பி பார்த்தார்கள். 'அந்த ஏவாள் சனியே செஞ்ச சதியா இருக்குமோ?' ஆதாம் கேட்டான். பிரம்மன் மௌனத்தை அழிக்காமல், தன புடுக்கிலிருந்து மனிதர்களை உருவாக்க முயன்றான். இவள் உரக்க சிரித்தாள். 'உனக்கு மனிதர்களை உண்டாக்கும் அறிவிருக்கிறது என்று யார் சொன்னா?' என்று கேட்டாள்.

புத்தகத்தைத் திறந்தாள். ஆதி குகை, ஆதி மனிதன், ஆதி உலகம், அதன் மேல் கட்டப்பட்ட மனிதர்கலாளன வனாந்திரம், அதன் மேல் கட்டப்பட்ட புத்தகங்களாலான வனாந்திரம் என்று ஒரு அடுக்கி வைத்த உலகினை புத்தகம் இவளுக்கு காட்டியது.குழந்தைகளின் லீகோ செங்கல்கள் மாதிரி. சுண்டு விரலால் செங்கல்களை சிதரியடித்தாள். இவை எல்லைகள் பங்கு போட்டுக் கொள்ளும் சகோதர தேசங்கள் தான், என்றாள்.

புத்தகங்களாலான வனாந்திரத்தில் கொட்டகையிட்டு,  நேரம் செலவிடுவதற்கு காகிதத்தினாலான உலகங்களையும், தேசங்களையும் உருவாக்கி அழித்துக்கொண்டிருந்தாள்.


(படங்கள் அனைத்தும் இங்கிருந்து)