ஒரு கனவு நிழலாடுகிறது. திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு. இந்த கனவு ஒரு மணி நேரத்துக்கு அம்பது கிலோமீட்டர் வேகத்திற்கு குறைந்து ஓட்டினால் வெடித்துவிடும் என்று. அலறிக்கொண்டு அக்செலரேடர் மீதிருந்த காலைத் தூக்கினேன். கனவு வெடித்து சிதறியது.
துகள்கள் காற்றில் பறந்து சென்றன.
அணுமின் உற்பத்தி நிலையத்தின் மீது புகை மண்டலம். சில பெண்கள் அலுங்கி குலுங்கி ஒரு பேருந்தில் ஆடுகிறார்கள். ஒரு பெரிய பாம்பு ஒரு கறுப்பின மனிதனை முழுவதுமாக முழுங்குகிறது. ஒரு சிறு பையன் சமையல் செய்கிறான். டைடானிக் கப்பல் உருவாகிய கதை ஒருத்தர் சொல்கிறார். "என்ன விலை அழகே" என்று ஒருவன் பாடுகிறான். சுனாமி தாக்கி ஆயிரத்திற்கு மேலான மக்கள் சாவு. "நீ இன்றி நானும் இல்லை, என் காதல் பொய்யும் இல்லை," என்று இன்னொருவன் பாடுகிறான். எல்லாம் பொய் தான், மகளே, என்று ஒரு தந்தை ஆறுதல் சொல்கிறார். இரு கல்லூரிப் பெண்கள் குத்தி, சுட்டு கொலை. பொது வெளிகளில், காலை பொழுதுகளில். எந்த இடமும் உனக்கு பாதுகாப்பு கிடையாது. எந்த வேளையும் உனக்கு நல்ல நேரம் கிடையாது. ஒரு கனவாக பொறந்த ஒரே குற்றத்துக்காக நீ சாக வேண்டும், என்று மறுபடியும் தொலைபேசி அழைப்பில் ஒரு குரல் மிரட்டியது.
ரீமோட்டை அழுத்தினேன்.
துகள்கள் சுருண்டு, உருண்டு இருளிற்குள் மறைந்து, காணாமல் போக, பல கனவுகளின் பேய்கள் என்னை சூழ்ந்து கொண்டன.
படம்: Speed திரைப்படக் காட்சி
No comments:
Post a Comment