I
இது இவளுக்கென்ற தனி இருட்டறை. உள்ளே நுழைய வேறு எவருக்கும் அனுமதி கிடையாது.
இதயம், எலும்பு கூடிலிருந்து விடுதலை வேண்டி, துடிப்புடன் அந்த கதவில் தட்டும். மேல் விரையும் ரத்த அழுத்தம் அந்த கதவை சிதறி அடிக்கும்.
புயலாய் உள்ளே நுழைவாள். அறை அவளை அரவணைக்கும். பலி ஆடுகளின் கறியை அவளுக்கு பரிமாறும். அவற்றின் குடலை உருவி அவள் கண் முன் உலுக்கி காட்டும், அவள் சிரிக்கும் வரை. அவள் கால் நகங்களில் பூசுவதற்கு அவற்றின் ரத்தத்தை பிதுக்கி தரும்.
பச்சை கறி துண்டை மென்றவாரே, இவளும் அறையை அணைத்துக் கொள்வாள். உன்னை தவிர வேறு யாரும் என்னை புரிந்து கொள்வதில்லை, என்று விசும்புவாள். அறை ஒரு அலறலை பாடி, அவளை தூங்கவைக்கும்.
அவளுக்கு முழிப்பு வரும் போது, அறை மறைந்துவிடும்.
II
அறையின் பிறப்பிடத்தைத் தேடி, இவள் பல ஆபத்தான பயணங்களை மேற்கொண்டாள், பாதாளங்களில் இறங்கினாள்.
ஒரு சிறு பிள்ளை தன் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டிருந்தது, "பெரிசானது, நானு அக்காவு கல்யானோ பண்ணி, வீடு நடத்துவோ." பிரளயமாய் புறப்பட்ட சிரிப்பு அந்த குரலை அழித்தது.
பாதாள பாதைகளை தொடர்ந்தாள். தம்பி-எவ்ளோ-வெள்ளையா-இருக்கா என்ற ஊரை சுற்றிப் பார்த்தாள். அம்மாவுக்கு-யே-என்ன-பிடிக்கல என்ற நகரத்தை நன்கு அறிந்தவர்களின் சலிப்புடன் கடந்தாள். என்-அப்பா-ஒரு-மன-நோயாளி என்ற மந்திர விளையாட்டு பூங்காவில் சிறிது நேரம் செலவிட்டாள். அந்த பூங்காவில் நிமிடத்திற்கு ஒரு புது மாயாஜாலம் காண்பிப்பார்கள். பல முறை சுற்றிவந்தாள்.
III
அந்த அறையின் செங்கல்களை இங்கிருந்து தான் செதுக்கி எடுத்தார்கள், என்று வழி துணைக்கு வந்தவன் சொன்னான்.
அப்படியா, என்றாள்.
அந்த அறையுள் அடுத்த முறை நுழைந்தபொழுது அவள் தூங்க வில்லை - முழிப்புடன் அவளை அரவணைத்த அறையை நோட்டமிட்டாள்.செங்கல்கள் வேறொன்றும் இல்லை, இவை தான் - மண்டை ஓடுகள், புத்தகங்கள், சானிட்டரி நாப்கின்கள், கதவுகள், உறவுகள், ராஜ்யங்கள், பழைய காதலர்களின் புகை படங்கள், கனவுகள், மிரட்டல்கள், பத்திரிக்கைகள், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைகள். அந்த செங்கல்களின் அற்புத வடிவங்களை மொழி பெயர்க்க தொடங்கினாள்.
படங்கள்: சால்வதோர் டாலி
No comments:
Post a Comment