Monday, August 22, 2011

அவள்

ஒடுக்கப்படுகிறாள். ஒடுக்குகிறாள். என்னை அவள் பிம்பத்தில் செதுக்க உளியுடன் வருகிறாள். என் சதையும், ரத்தமும் கல்லாய் உறைகின்றன.

சாதியை அன்பூற்றி வளர்த்தவள் இவள். 'நாமெல்லாம் இப்படி,' 'அவர்களெல்லாம் அப்படி' என்று மனிதத்திற்கே நீர் தெளிப்பாள். பல ஆயுதம் ஏந்தும் கொலைகார சாதியத்தின்  அடியாள் அவள். 'நீ அவனுடன் பேசினால் படிப்பை நிறுத்துவேன்.' 'நீ அவளைத் திருமணம் செய்தால் தற்கொலை செய்வேன்.' மிரட்டலின் ராணிக்கு, காதலின் எதிரிக்கு எப்படி அன்பின் உறைவிடம் என்று பெயர்வைத்தார்கள்?

பின் சாமியை உருண்டை உருண்டையாக உருட்டி, 'அதோ பார் விழா,' 'இதோ பார் புது உடை,' என்று அறியா பருவத்தில் வாயினுள் சாமியைத் திணித்தவள். மறுக்க வாயைத் திறந்தபோது, 'உள்ளே உலகமே சுழலுதே' என்று பரவசத்தில் மூழ்கினாள். ஏசு நாதரின் மறு பிறவியாக என்னை அறிவித்து, சிலுவையில் அறைந்துவிடக்கூடாதே என்று வாயை மூடினேன்.

 உயிருடன் பெண்ணை அக்கினிக்கு ஊட்டிவிடும் சடங்கு இன்னும் ஓயவில்லை. சமையலறை அவளை ஒரு முப்பதாண்டுகளாவது வாட்டி, வதக்கி, வேகவைத்து, பொறித்து, சுட்டெரித்திருக்கும். பல ஆயிரம் தோசை அவளை சுட்டிருக்கும். சில நூறு பனியாரம் அவளை பொறித்திருக்கும். எத்தனை முறை சோறு அவளை உலையில் போட்டதோ. யார் அறிவார். அந்த நரக வேதனையை ஒரு நாளும் பேசமாட்டாள். வெந்து வதங்க புது புது முறைகள் கண்டுபிடிப்பாள்.

(இவை பெண் வேலை, இவை ஆண் வேலை. முலை இருப்பது பால் சுரக்கவும், பால் பொங்க வைக்கவும், காபி பரிமாறவும் உதவுகிறது. மூளை இருப்பதினால் யாருக்கு என்ன லாபம்?)

பெண் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுப்பாள் - அடக்க ஒடுக்கமாக, அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் ஏதுவாக, கையில், காலில், கழுத்தில் விலங்குகளோடு - தங்கத்தில் செய்தாலும் சங்கிலி, சங்கிலி தானே?

அவள் ஒரு புதைகுழி. தேவைகளால், வெறுப்புகளால், விருப்பங்களால் என்னை உள்வாங்குகிறாள். பெரும் பாதாளங்களை மூடும் மேக மூட்டம் அவள். பஞ்சைப் போல் மென்மையாக தெரிகிறதே என்று அவள் அரவணைப்பில் விழுந்தால், அந்தரத்தில் இருப்பது வெகு நேரம் தெரியாமல் போகலாம்.

கொஞ்சி குலாவி தாலாட்டி சீராட்டி சோறூட்டி ஆளாக்கி. போதும்பா உங்க தாய்மையான பொய்கள். 

படம்: ஜாமினி ராயின் தாயும் குழந்தையும் 

6 comments:

  1. நல்ல எழுத்து. நன்றி. //மூளை இருப்பதினால் யாருக்கு என்ன லாபம்?// உழைப்பு சுரண்டப்படுவதை அறிவு கேள்விக்குட்படுத்துவதால் அவளுக்கு லாபம். அவளுடைய லாபம் அடுத்தவரின் சுக இழப்பு - நட்டம். அலங்கரிக்கப்பட்ட யானையின் கால்களில் உள்ள சங்கிலித் தழும்புகள் ஒரு பொருட்டில்லைதான். தேவையும் கூட என்பார்கள்!

    ReplyDelete
  2. யார் சொன்னதென்று நினைவில்லை இப்பொழுது - 'பூந்தோட்டங்களையும், பெண்களின் அழகையும் ரசிக்கலாம், ஆனால் இவற்றில் எதற்கும் ரத்தத்தை விலையாக கொடுக்கவேண்டும் என்றால் அவற்றை உடனே அழித்துவிடவேண்டும்' என்று.

    ReplyDelete
  3. very very interesting blog ... keep writing...

    ReplyDelete
  4. Finally, found you! Malarvizhi. Was looking for the writing caste blog and saw that you've made it private. Why? If possible, do write to me at hannah.jayapriya@gmail.com

    ReplyDelete
  5. "மனிதத்திற்கே நீர் தெளிப்பாள்" - அற்புதம்
    "வெந்து வதங்க புது புது முறைகள் கண்டுபிடிப்பாள்." -அடடா!

    ReplyDelete